Blog
தேசபக்தியை நிரூபிக்க முதலில் உங்கள் மகனை போருக்கு அனுப்புங்கள்…..
ஈரான் மற்றும் அமெரிக்க-இஸ்ரேல் படைகளுக்கு இடையே கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வரும் ‘எபிக் பியூரி’ (Operation Epic Fury) போர் நடவடிக்கையில், இதுவரை 6 அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக பென்டகன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, அமெரிக்காவில் அதிபர் டொனால்ட் ட்ரம்பிற்கு எதிராக ஒரு வினோதமான மற்றும் தீவிரமான பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
சமூக வலைதளங்களில் #SendBarron என்ற ஹேஷ்டேக் வைரலாகி வருவதுடன், ட்ரம்பின் 19 வயது மகன் பரோன் ட்ரம்ப்பை (Barron Trump) உடனடியாக ராணுவத்தில் சேர்த்து ஈரான் போருக்கு அனுப்ப வேண்டும் என்று ஆயிரக்கணக்கான அமெரிக்கர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். “மற்ற இளைஞர்களைப் போருக்கு அனுப்பும் அதிபர், முதலில் தனது சொந்த மகனை அனுப்பி தனது தேசபக்தியை நிரூபிக்க வேண்டும்” என்று மக்கள் ஆவேசமாகப் பதிவிட்டு வருகின்றனர்.
குறிப்பாக, வியட்நாம் போரின் போது மருத்துவக் காரணங்களைக் காட்டி ட்ரம்ப் ராணுவத்தில் சேருவதைத் தவிர்த்ததைச் சுட்டிக்காட்டும் விமர்சகர்கள், பரோன் ட்ரம்ப் இப்போது நியூயார்க் பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருப்பதை விட, போர்க்களத்தில் இருப்பதுதான் முறை எனத் தெரிவித்துள்ளனர்.
இந்தப் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக, பரோன் ட்ரம்ப் ராணுவ உடையில் இருப்பது போன்ற போலிப் புகைப்படங்கள் மற்றும் நையாண்டி இணையதளம் ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் அமெரிக்க அரசியலில் தற்போது பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.

