Blog
மூதூர் வைத்தியசாலை பற்றிய ஒரு இளம் தாயின் உளக்குமுரல்!!!
😔 எனக்கு நடந்த உண்மை சம்பவம்…
தற்போது மூதூர் தள வைத்தியசாலையின் பிரசவ வார்டில் நடைபெறும் பல துயர சம்பவங்கள் புதிய விடயம் அல்ல. காலாகாலமாக அந்த வார்டில் இருக்கும் சில தாதியர்களும் வைத்தியர்களும் திமிர் பிடித்தவர்களைப் போலவே நடந்து கொள்வார்கள்.
எனது 22வது வயதில் (2022.01.11), எனது முதல் குழந்தை பிறப்பிற்காக அங்கு அனுமதிக்கப்பட்டேன். அப்போது எனக்கு பிரசவம் பற்றிய எந்த அறிவும் இருக்கவில்லை. என்னையும் என்னுடன் இருந்த சக கர்ப்பிணிகளையும் அவர்கள் நடத்திய விதம் இன்னும் என் கண்முன்னே இருக்கிறது.
பிரசவ நாள் நெருங்கியபோது வயிற்றில் பட்டி போட்டு பரிசோதிக்கப்பட்டது. அனைவரது குழந்தைகளின் இதயத்துடிப்பும் வேகமாகவும் தெளிவாகவும் கேட்கப்பட்டது. ஆனால் எனது குழந்தையின் இதயத்துடிப்பு மட்டும் மெதுவாகக் கேட்கத் தொடங்கியது. நான் மிகவும் பதற்றமடைந்து, “எதற்காக என் குழந்தையின் இதயத்துடிப்பு மட்டும் மெதுவாகக் கேட்கிறது?” என்று பல தடவைகள் தாதியரிடம் கேட்டேன்.
அதற்கு அவர், “உனது குழந்தை சோம்பேறி போல தூங்கிக் கொண்டிருக்கிறது” என்று மிகவும் கேலியாகப் பதிலளித்தார்.
என்னுடன் இருந்த இன்னொரு பெண்ணுக்கு இதே விடயத்திற்காக சத்திரசிகிச்சை செய்ய முடிவு செய்தனர். நானும் கேட்டபோது, “இல்லை, VOG-க்கு நாளை நிறைய சிசேரியன் இருப்பதால் உனக்கு அந்த அளவுக்கு எந்த அவசியமும் இல்லை” என்று கூறினார்கள். எனக்கும் அனுபவம் இல்லாததால் அதை ஏற்றுக்கொண்டேன்.
மேலும் அவர்களுடைய நடத்தைகளை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. அங்கிருந்த சில பெண் வைத்தியர்களின் நிலையும் இதுதான். தெரிந்தவர்களுக்கு ஒரு மாதிரியும், தெரியாதவர்களுக்கு இன்னொரு மாதிரியும் அவர்களது இரு முகங்களைக் காட்டிக் கொண்டிருந்தனர்.
எந்த அனுபவமும் இல்லாமல் வரக்கூடிய எங்களை அவர்கள் நடத்தும் விதம் மிகவும் கவலைக்குரியது. ஏதாவது ஒரு வருத்தத்தை கூறினால், அதற்கு அவர்களுடைய பதில் ஏச்சும் திட்டும் மட்டுமே இருக்கும். அவர்களது பாதி நேரம் கைபேசியில் சீரியல் பார்ப்பதிலேயே கழியும். எப்போதும் அனைவரையும் திட்டிக் கொண்டே இருப்பார்கள். ஒருபோதும் நோயாளிகளுடன் சிரித்துப் பேசியதை நாங்கள் காணவில்லை.
😢 பிரசவ வலியால் அவதிப்படும் எங்களுக்கு ஒரு ஆறுதல் வார்த்தை கூட கூற மாட்டார்கள். சத்தமாகப் பேசியும் ஏசியும் கொண்டிருப்பார்கள். சில விடயங்களை இங்கே என்னால் பதிவிட முடியவில்லை. அவர்கள் பேசும் விதமும் நடத்தையும் மிகவும் வேதனை அளிப்பவை. முகத்தில் சிரிப்பே இருக்காது; எப்போதும் கடுகடுத்த முகத்துடனே இருப்பார்கள்.
அன்று எனது பிரசவ நாள். எனது குழந்தை என் வயிற்றை விட்டு வெளியே வரும்போது, குழந்தையின் கொடி தலையைச் சுற்றியிருந்ததால் என் குழந்தை இந்த உலகை விட்டு பிரிந்து போனது.
இது இறைவனுடைய நாட்டம் என்றாலும், இவர்களுடைய (தாதியர் மற்றும் வைத்தியர்கள்) பொறுப்பற்ற அலட்சியங்களும் இதற்குக் காரணமாக இருந்ததாக நான் உணர்கிறேன்.
அன்று என் நிலையையும் என் குழந்தையையும் நினைத்து நான் இதை பெரிதாக வெளியிடவில்லை. நாளை இந்த வைத்தியசாலையில் என்னை புறக்கணித்து விடுவார்கள் என்ற பயமும் ஒருபுறம் இருந்தது.
2026.05.30 நேற்றைய தினமும் கூட சிசு உயிருடன் தாய் மரணித்து விட்டார் யார் காரணம்???
இதேபோல் எத்தனையோ பெண்கள் இவர்களுடைய அட்டூழியங்களை வெளியில் கூறாமல் அமைதியாக இருப்பார்கள். எங்களுக்கு இதற்கான மாற்றம் வேண்டும்.
மாதாமாதம் சம்பளம் பெறுவது மட்டுமல்ல முக்கியம். தர்மத்துடனும் மனிதாபிமானத்துடனும் உங்கள் சேவைகளை செய்ய வேண்டும். 🙏
இப்படிக்கு,
உண்மையுள்ள ஒரு சகோதரி.

