Blog
நவம்பர் 1 முதல் 8 வகையான நடவடிக்கைகளுக்கு TIN சான்றிதழ் கட்டாயம்! ….
நவம்பர் 1 முதல் 8 வகையான நடவடிக்கைகளுக்கு TIN சான்றிதழ் கட்டாயம்! 🚨
இலங்கையில் எதிர்வரும் நவம்பர் 1ஆம் திகதி முதல் எட்டு வகையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு செல்லுபடியாகும் வரி செலுத்துவோர் அடையாள எண் (TIN) சான்றிதழைச் சமர்ப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு இறைவரித் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, 2026ஆம் ஆண்டின் 11ஆம் இலக்க உள்நாட்டு இறைவரித் திருத்தச் சட்டத்தின் கீழ் இந்த நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
TIN சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ள 8 நடவடிக்கைகள்:
- எந்தவொரு வங்கி அல்லது நிதி நிறுவனத்திலும் கணக்கொன்றைத் திறத்தல்.
- கட்டிட நிர்மாணத் திட்டத்திற்கு அனுமதி பெறுதல்.
- மோட்டார் வாகனத்தைப் பதிவு செய்தல்.
- மோட்டார் வாகன வருமான அனுமதிப்பத்திரத்தைப் புதுப்பித்தல்.
- காணி அல்லது காணி உரிமையைப் பதிவு செய்தல்.
- வணிக நிறுவனமொன்றைப் பதிவு செய்தல்.
- இலங்கையில் பதிவு செய்யப்பட்ட நிறுவனமொன்றின் பங்குகளைப் பரிமாற்றம் செய்தல். (பங்குகளை வழங்குபவர் மற்றும் பெறுபவர் ஆகிய இருவருக்கும் இது பொருந்தும்.)
- கடன் அட்டையைப் (Credit Card) பெற்றுக்கொள்ளுதல்.
இந்த நடவடிக்கைகளைச் செயற்படுத்தும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் நிறுவனங்கள், அவற்றை நிறைவு செய்வதற்கு முன்னர் TIN சான்றிதழ் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதை உறுதிப்படுத்த வேண்டும் எனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
யாருக்கு TIN கட்டாயம்?
2023 டிசம்பர் 31ஆம் திகதியன்று 18 வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதுடைய இலங்கையில் வசிக்கும் தனிநபர்களுக்கும், 2024 ஜனவரி 1ஆம் திகதி அல்லது அதற்குப் பின்னர் 18 வயதைப் பூர்த்தி செய்தவர்களுக்கும் இந்தப் பதிவு நடைமுறை பொருந்தும்.
இதுவரை TIN இலக்கத்தைப் பெற்றுக்கொள்ளாதவர்கள் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் இணையவழி e-Services ஊடாகப் பதிவு செய்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், தங்களது TIN இலக்கத்தை இணையவழியில் சரிபார்த்து, தேசிய அடையாள அட்டை இலக்கம் மற்றும் TIN இலக்கம் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ள சரிபார்ப்பு முடிவின் அச்சுப் பிரதியையும் உத்தியோகபூர்வ சான்றிதழுக்குப் பதிலாகச் சமர்ப்பிக்க முடியும் எனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நவம்பர் 1ஆம் திகதிக்கு முன்னர் TIN சான்றிதழைப் பெற்றுக்கொண்டு, அதன் செல்லுபடித்தன்மையை உறுதிப்படுத்துமாறு உள்நாட்டு இறைவரித் திணைக்கள ஆணையாளர் நாயகம் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
