Local, News

இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த கல்முனை வைத்தியசாலை விவகாரம்……

கல்முனை வைத்தியசாலை ஆடை விவகார வழக்கு: மிப்ளால் மௌலவியின் ஊடகக் கருத்து நீதிமன்றத்தின் கவனத்துக்கு!

கல்முனை வைத்தியசாலையின் ஆடை விவகாரம் தொடர்பில் கருத்து வெளியிட்டமைக்காக, டாக்டர் குணசிங்கம் சுகுணன் ஆறு முக்கிய பிரமுகர்களுக்கு எதிராகத் தாக்கல் செய்துள்ள வழக்கு இன்று (02) மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, வழக்காளியான டாக்டர் குணசிங்கம் சுகுணன் சார்பில் ஆஜரான சட்டத்தரணி கனகலிங்கம் கிசோபனா, மூன்றாவது பிரதிவாதியான ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் தலைவர் மிப்ளால் மௌலவி கடந்த வழக்கு விசாரணை நிறைவடைந்த பின்னர் ஊடகங்களுக்கு வெளியிட்ட கருத்து தொடர்பில் நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டுவந்தார்.

கடந்த வழக்கு விசாரணை நிறைவடைந்த பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த மிப்ளால் மௌலவி, “இப்படியான நிகழ்வுகளைப் பார்க்கும்போது கிழக்குக்கு முஸ்லிம் முதலமைச்சர் தேவை” எனக் குறிப்பிட்டிருந்ததாக சட்டத்தரணி கனகலிங்கம் கிசோபனா நீதிமன்றத்தில் சுட்டிக்காட்டினார்.

இதனையடுத்து, குறித்த விடயம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த நீதவான் செல்வி அ. தர்ஷினி, சட்டத்தரணி கனகலிங்கம் கிசோபனாவிடம், இது தொடர்பில் என்ன செய்ய வேண்டும் என்பதை அறிந்து அதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பணித்தார்.

இதேவேளை, குறித்த வழக்கு தொடர்பில் பிரதிவாதிகள் சமூக வலைத்தளங்கள் மற்றும் ஊடகங்கள் வாயிலாகக் கருத்துகளை வெளியிடுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *