Blog
நாடாளுமன்ற வரலாற்றில் ஜனாதிபதியின் புதிய சாதனை…….
4 மணித்தியாலம் 50 நிமிடங்கள் நீடித்த பட்ஜெட் உரை: நாடாளுமன்ற வரலாற்றில் அநுரவின் புதிய சாதனை!
இலங்கையின் 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நவம்பர் 12ஆம் திகதி வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தார்.
சுமார் 4 மணித்தியாலங்களும் 50 நிமிடங்களும் தொடர்ச்சியாக உரையாற்றியதன் மூலம், இலங்கை நாடாளுமன்ற வரலாற்றில் இரண்டாவது அதிக நேரம் வரவு செலவுத் திட்ட உரையை நிகழ்த்தியவர் என்ற இடத்தை அவர் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இது சுதந்திர இலங்கையின் 81ஆவது வரவு செலவுத் திட்டமாகவும், தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் சமர்ப்பிக்கப்படும் மூன்றாவது வரவு செலவுத் திட்டமாகவும் அமைந்துள்ளது.
2027ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பை முன்னெடுப்பதற்காக நாடாளுமன்றம் வியாழக்கிழமை பிற்பகல் 1.30 மணிக்கு சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் கூடியது.
வழமையான ஆரம்ப நடவடிக்கைகளைத் தொடர்ந்து, நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரான ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு வரவு செலவுத் திட்டத்தைச் சமர்ப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டது.
இதனையடுத்து பிற்பகல் 1.40 மணியளவில் தனது உரையை ஆரம்பித்த ஜனாதிபதி, மாலை 6.30 மணியளவில் அதனை நிறைவு செய்தார்.
இதன்படி அவரது வரவு செலவுத் திட்ட உரை மொத்தமாக 4 மணித்தியாலங்களும் 50 நிமிடங்களும் நீடித்துள்ளது.
இலங்கை நாடாளுமன்ற வரலாற்றில் மிக நீண்ட நேரம் வரவு செலவுத் திட்ட உரையை நிகழ்த்தியவர் என்ற சாதனை முன்னாள் நிதியமைச்சர் ரொனி டி மெல் வசம் இருப்பதாக வரலாற்றுத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.
1977ஆம் ஆண்டில் அவர் சமர்ப்பித்த வரவு செலவுத் திட்ட உரை 5 மணித்தியாலங்களும் 30 நிமிடங்களும் நீடித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
அதற்கடுத்ததாக, 2016ஆம் ஆண்டில் அப்போதைய நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க 4 மணித்தியாலங்களும் 30 நிமிடங்களும் உரையாற்றியிருந்தார்.
இந்நிலையில், 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை 4 மணித்தியாலங்களும் 50 நிமிடங்களும் சமர்ப்பித்ததன் மூலம், ரவி கருணாநாயக்கவின் உரை நேரத்தை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க 20 நிமிடங்களால் கடந்துள்ளார்.
எனினும், ரொனி டி மெலின் 5 மணித்தியாலங்கள் 30 நிமிடங்கள் என்ற வரலாற்றுச் சாதனை தொடர்ந்தும் முறியடிக்கப்படவில்லை.
