Local, News, Uncategorized

குச்சவெளி பொலிஸாரால் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி சந்தேகநபர் கிண்ணியா ஆதில் கைது…

குச்சவெளி பொலிஸாரால் வெளிநாட்டு வேலைவாய்ப்பு மோசடி சந்தேகநபர் கைது

வெளிநாட்டில் வேலை பெற்றுத்தருவதாக சமூக ஊடகங்கள் ஊடாக விளம்பரப்படுத்தி பல கோடி ரூபாய் பண மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படும் கிண்ணியா ஆதில் என்பவரை குச்சவெளி பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த கைது நடவடிக்கை, பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பாதிக்கப்பட்டவர்களால் அளிக்கப்பட்ட முறைப்பாடுகளின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர், கிண்ணியா பகுதியை பிறப்பிடமாகக் கொண்டவராகவும், தற்போது குச்சவெளி பிரதேசத்தில் திருமணமாகி குடும்பத்துடன் தொடர்புடையவராகவும், நீண்ட காலமாக கொழும்பில் வசித்து வருபவராகவும் தெரியவந்துள்ளது.

வெளிநாடுகளில் உயர்ந்த சம்பளத்துடன் வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் என சமூக ஊடகங்களில் கவர்ச்சிகரமான விளம்பரங்கள் வெளியிட்டு, பல இளைஞர்கள் மற்றும் பொதுமக்களிடமிருந்து இலட்சக்கணக்கில் இருந்து கோடிக்கணக்கான ரூபாய் வரையிலான தொகைகளை பெற்றுக்கொண்டதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், வேலைவாய்ப்பு வழங்கப்படாமை மற்றும் பணம் மீள வழங்கப்படாதமை தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைத்ததையடுத்து விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக குச்சவெளி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரிக்கப்பட்டு வருவதுடன், அவரை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, சமூக ஊடகங்கள் மூலம் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை வழங்குவதாக கூறப்படும் நிறுவனங்கள் மற்றும் நபர்கள் தொடர்பில் பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் செயல்பட வேண்டும் என்றும், அரச அங்கீகாரம் பெற்ற முகவர்களிடமிருந்து மட்டுமே சேவைகளை பெற வேண்டும் என்றும் பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *