Blog
முல்லைத்தீவு முஸ்லிம் மக்களை மீள்குடியேற்ற கோரி 10,000 கையெழுத்து பெறும் போராட்டம் ஆரம்பம்….
முல்லைத்தீவு முஸ்லிம் மக்களை மீள்குடியேற்ற கோரி 10,000 கையெழுத்து பெறும் போராட்டம் ஆரம்பம்*
முல்லைத்தீவு, 28.08.2026
முல்லைத்தீவு மாவட்டத்திலிருந்து 1990 ஆம் ஆண்டு பலவந்தமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்கள், 2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவடைந்த பின்னரும் இதுவரை தமது சொந்த இடங்களில் மீளக்குடியேற முடியாத நிலையில் உள்ளனர்.
யுத்தம் முடிந்து 16 வருடங்கள் கடந்துள்ள நிலையிலும், வெளி மாவட்டங்களில் உள்ள அகதி முகாம்களிலும், வாடகை வீடுகளிலும் பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் இம்மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.
இம்மக்கள் மீளக்குடியேறுவதற்கான உரிய காணிகளையும், வீட்டு வசதிகளையும் வழங்குவதற்கு மாவட்ட அரச நிர்வாகங்கள் தொடர்ந்து மறுத்து வருகின்றன. அத்துடன் இம்மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திரு. ரவிகரன் அவர்களும் இம்மீள்குடியேற்றத்தை கடுமையாக எதிர்து வருகின்றார்.
இந்நிலையில், பாதிக்கப்பட்ட மக்களின் உரிமைகளை உடனடியாக ஆராய்ந்து தீர்வு வழங்குவதற்காக ஜனாதிபதி ஆணைக்குழு ஒன்றை நியமிக்குமாறு கோரி 10,000 கையெழுத்துக்களை பெறும் நடவடிக்கை இன்று வெள்ளிக்கிழமை முல்லைத்தீவு பள்ளிவாசல்களில் ஆரம்பமானது.
இந்த கையெழுத்து பெறும் நடவடிக்கை அடுத்த வாரங்களில் முல்லைத்தீவு, வவுனியா, புத்தளம், கொழும்பு உள்ளிட்ட பல மாவட்டங்களிலும் தொடர்ந்து இடம்பெறவுள்ளது.
அரசாங்கம் உடனடியாக தலையிட்டு இம்மக்களின் நீண்டகால கோரிக்கைக்கு நீதமான தீர்வை வழங்க வேண்டும் என பாதிக்கப்பட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
