Blog
ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஆதம்பாவாவின் கருத்துக்கள் வருத்தமளிக்கின்றன…
“ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஆதம்பாவாவின் கருத்துக்கள் வருத்தமளிக்கின்றன; அவர் பொறுப்புணர்வோடு நடந்துகொள்ள வேண்டும்”
கல்முனை வடக்கு தள வைத்தியசாலையில் நியமனம் பெற்றுள்ள சுகாதார உதவி ஊழியர்களின் ஆடை சம்பந்தமாக பிரச்சினை ஒன்று உருவானபோது அதை தீர்ப்பதற்காக சமூகத்தின் பல தரப்புகளில் இருந்தும் பலர் தாமாக முன் வந்தார்கள். சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பொறுப்புள்ள அரசியல் கட்சி என்ற வகையில் சமூக நீதிக் கட்சியும் அதில் பங்களித்தது. குறித்த பிரச்சினையை அரசியல் ரீதியாக தீர்ப்பதற்கு அமைச்சரின் கவனத்திற்கு பிரச்சினையை கொண்டு செல்வதிலும், சட்டரீதியாக தீர்ப்பதற்கு நீதிமன்றத்தை நாடுவதிலும் எமது கட்சியின் கவனம் இருந்தது.
கடந்த புதன்கிழமை அமைச்சரவைக் கூட்டத்தின் பின்னரான பத்திரிகையாளர் சந்திப்பில், தமக்கு இது பற்றி எதுவும் தெரியாது என்று சுகாதார அமைச்சர் தெரிவித்திருந்தார். அதுமட்டுமல்லாமல், வைத்தியசாலை நிர்வாகத்தின் பொறுப்பில் இருப்பவர்களும், வழக்கமாகப் பின்பற்றிவரும் ஆடை முறைமைகளை அனுமதிக்க முடியாது என்ற அர்த்தத்தில் பொது வெளியில் கருத்து தெரிவித்திருந்தார்கள். எனவே, புதன்கிழமை வரையும் இந்தப் பிரச்சினை தீர்க்கப்பட்டு இருக்கவில்லை என்பது தெளிவாக தெரிகின்றது.
ஆளும் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல்வாதி என்ற வகையில் பாராளுமன்ற உறுப்பினர் ஆதம்பாவா, இதனை அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்றிருக்க வேண்டும். அப்படி நடக்கவில்லை என்பதே கவலைக்குரிய விடயம். அதற்கு மேலதிகமாக, குறித்த பிரச்சனையில் அரசாங்கத்தின்மீது நல்லெண்ணம் வைத்து பிரச்சினையை அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்பவர்கள் மீதும், நாட்டின் நீதிப் பொறிமுறை மீது நம்பிக்கை வைத்து சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்பவர்கள் மீதும் “அரசியல் லாபத்திற்காக செயல்படுபவர்கள்” என்று முத்திரை குத்த முயற்சிப்பது வருத்தத்தையும் அதிர்ச்சியையும் தருகின்றது.
ஆளும் கட்சியின் மக்கள் பிரதிநிதி என்ற வகையில் பொதுவெளியில் கருத்துத் தெரிவிக்கும் போது முதிர்ச்சியுடனும், பொறுப்புணர்வுடனும் செயற்படுவதோடு, மக்களின் பிரச்சினைகளை தீர்த்து வைக்க முயற்சிக்கும் தரப்புகளை இழிவுபடுத்தும் செயற்பாடுகளிலிருந்தும் தவிர்ந்துகொள்ள வேண்டும் என்பதனையும் பாராளுமன்ற உறுப்பினர் ஆதம்பாவா அவர்களுக்கு நினைவூட்டுகிறோம்.
அர்க்கம் முனீர்,
தலைவர்,
சமூக நீதிக் கட்சி.
14.08.2026.
