Local, News

கருமலையூற்று விவகாரம்; மீண்டும் கள விஜயத்தில் MP இம்ரான் மஹ்ரூப்….

திருகோணமலை கருமலையூற்று கடற்கரைப் பகுதியில் 05.05.2026 அன்று காலை விமானப்படையினரால் திடீரென அமைக்கப்பட்ட வீதி கடவை காரணமாக, பல தசாப்தங்களாக மீனவர்கள், பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் பயன்படுத்தி வந்த முக்கியப் பாதை பாதிக்கப்பட்டது. எந்தவித முன்னறிவிப்பும் இன்றி மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கை அப்பகுதி மக்களிடையே கடும் பதற்றத்தையும் கவலையையும் ஏற்படுத்தியது.

05.05.2026 காலை சுமார் 8.00 மணியளவில் வீதியின் நடுப்பகுதியில் அமைக்கப்பட்ட இந்த கடவை, பொதுமக்களின் இயல்பு போக்குவரத்துக்கு பெரும் இடையூறாக அமைந்தது. பின்னர், இந்த பிரச்சினை தீர்க்கப்பட்டதாகவும், கடவை அகற்றப்படும் என்றும் பிரதி அமைச்சர் அன்றைய தினமே எனக்கு அறிவித்திருந்தார்.

ஆனால், “கடவை முழுமையாக அகற்றப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டிருந்த போதிலும், இன்று வரை அந்த கடவை வீதிக்கு அருகிலேயே காணப்படுவது மக்களிடையே தொடர்ந்தும் சந்தேகத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தி வருகிறது. மேலும், விமானப்படையினரும் அப்பகுதியில் தொடர்ந்து இருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இது தொடர்பாக நான் இன்று 14.05.2026 அன்று அப்பகுதிக்கு கள விஜயம் மேற்கொண்டு, மீனவர்கள் மற்றும் பொதுமக்களிடம் கருத்துக்களை கேட்டறிந்தேன். அப்போது அவர்கள் பல்வேறு கவலைகளையும் சந்தேகங்களையும் முன்வைத்தனர்.

அப்பகுதி மீனவர்கள் மற்றும் பொதுமக்களின் சார்பில் நாம் மீண்டும் கேட்க விரும்புவது:

இந்த நடவடிக்கை யாருடைய உத்தரவின் பேரில் மேற்கொள்ளப்பட்டது?

ஏன் எந்த முன்னறிவிப்பும் இன்றி பொதுமக்கள் பயன்படுத்திய வீதி மூடப்பட்டது?

அகற்றப்பட்டதாக கூறப்பட்ட கடவை இன்னும் ஏன் அப்பகுதியில் உள்ளது?

“பிரச்சினை முடிவடைந்தது” என்று கூறி இன்று 9 நாட்கள் கடந்தும், ஏன் இன்னும் விமானப்படை அதிகாரிகள் அங்கு தங்கியுள்ளனர்?

இந்த விடயம் ஏற்கனவே உயர்மட்ட அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது. பொதுமக்களின் சுதந்திரமான போக்குவரத்தையும் மீனவர்களின் வாழ்வாதாரத்தையும் பாதிக்கும் எந்த நடவடிக்கையும் தெளிவான விளக்கமின்றி தொடரக் கூடாது என்பதே அப்பகுதி மக்களின் வலியுறுத்தலாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *